சிறையிலுள்ள பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முஹம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முஹம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நோர்வே நோபல் அமைப்பு முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 13 முறை கைது செய்துள்ள நர்கிஸ் ஐந்து முறை குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளார். இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். நர்கிஸ் முஹம்மதி தொடர்ந்து சிறை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெளதீகவியல மாணவியான முஹம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பிணையில் வெளிவந்த முஹம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அவரது இந்த போராட்டம், 2015ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குப் பின் இருக்கும் நிலையை உருவாக்கியது.

மருத்துவம், பெளதீகவியல், இரசாயனவியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையல் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் திங்கள்கிழமை (9) அறிவிக்கப்படவுள்ளது.

https://onlanka.lk/local-news/2933/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *