
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார்.
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான, சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய மூத்த மகள் மீரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் உள்ளே சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மீராவை அவருடைய பெற்றோர் மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரா மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். தனது எதிர்ப்பையும் தெரிவிப்பதில் சமரசம் செய்து கொண்டதில்லை. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து ரகுமானுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி பேசியிருந்தார். ஒரு யூடியூப் சேனல் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தது. அதில் பாஜக யாத்திரைக்கான டைட்டில் பாடலை கம்போஸ் செய்து கொடுக்க ரகுமானை அண்ணாமலை அணுகிய போது அவர் மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகு தீனா – கங்கை அமரனை கொண்டு அந்த டைட்டில் பாடலை ரெடி செய்ததாகவும் கூறியிருந்தது.
மேலும் இந்த கோபத்தில்தான் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் திட்டமிட்டு குளறுபடி செய்ததாகவும் இதற்காக பேரங்கள் நடந்ததாகவும் அந்த வீடியோவில் கூறியிருந்த நிலையில் பாஜகவினருக்கு நெருக்கமாக வலம் வரும் விஜய் ஆண்டனிதான் இந்த குளறுபடிக்கு துணை போனதாகவும் அந்த காணொலியில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விஜய் ஆண்டனி, அந்த யூடியூப் சேனல் சொல்வது பொய், விரைவில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.