
10 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா, ஆமதாபாத்தில் இன்று (05) ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் 13-வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்பு இந்தியாவில் 3 முறை உலகக் கோப்பை போட்டி நடந்தாலும் அவற்றை இந்தியா ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து தான் நடத்தியது.
முதல் முறையாக இப்போது இந்தியா தனியாக இந்த போட்டியை நடத்துவது தனித்துவம் வாய்ந்ததாகும்.
அதேவேளை ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆரம்ப விழா அஹமதாபாத்தில் நேற்று (04) இரவு 7.00 மணிக்கு நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஆரம்ப விழாவை ரத்து செய்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) தீர்மானித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகுவதை முன்னிட்டு பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்ப விழா நேற்று (04) அஹமதாபாத் நரோந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். இரவு 7.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிப்பு வெளியானது.
அத்துடன், இந்தியாவின் முன்னணி பாடகர்களான ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல் ஆகியோரும் இந்த கலை நிகழ்ச்சிகளில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆரம்ப விழாவின் முக்கிய அம்சமாக 10 அணிகளின் தலைவர்கள் பங்கேற்கும் அறிமுக நிகழ்ச்சியும் இடம்பெறவிருந்தது.
இதற்கான தனியாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை என்றும், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் போட்டிக்கான டிக்கெட்டை எடுத்திருப்பவர்கள் ஆரம்ப விழாவை மைதானம் வந்து பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆரம்ப விழாவை BCCI ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த திடீர் தீர்மானத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ஆரம்ப விழா நடைபெறாதது இதுவே முதல்முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், ஆரம்ப விழாவிற்குப் பதிலாக எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சியையும், உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டியின் போது ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு BCCI திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.