கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காகக் கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நீண்ட விசாரணைக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (14) கொழும்பு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலன்னாவ பிரதேசத்திலுள்ள கந்தவாக்க பிரதேசத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதாகக் கூறி 57 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளதாக,பெண் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அங்கொட, ஹிம்புட்டானை, முல்லேரிய புதிய நகரம் ஆகிய பகுதிகளில் சந்தேக நபர் அலுவலகத்தை நடத்திச் சென்று அதன் பணிப்பாளராக கடமையாற்றியதாகவும், ஊழியர்களில் வேறு எவரும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, ஹொரணை, களுத்துறை மற்றும் பல பிரதேசங்களில் பண மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.சந்தேகநபருக்கு நிலையான முகவரி இல்லை எனவும் சந்தேகநபர் ஒருவர் மூலம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தை பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.