ஏழாவது முறையாகவும் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுமா?

16-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் மோதுகின்றன.

நடப்பு செம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இலங்கை அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டுகளில் செம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

நடப்பு தொடரிலும் இலங்கை அணி சிறப்பாகவே ஆடி வருகிறது.

அதேநேரம் இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குஷால் மெண்டீஸ் (253 ஓட்டங்கள்), சதீர சமர விக்கிரம (215 ஓட்டங்கள்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரன (11 விக்கெட்டும்), வெல்லாலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் (275 ஓட்டங்கள்), லோகேஷ் ராகுல் (169 ஓட்டங்கள்), விராட் கோலி (129 ஓட்டங்கள்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97 போட்டிகளிலும் இலங்கை 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்ததுடன் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி 7-வது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *