சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி விவகாரம்!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சில அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் நாற்பத்திரண்டு (42) வெளிநாட்டவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக சனல் 4 ஒளிபரப்பிய காணொளி ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் விசாரணைகளில் அதற்குக் காரணமானவர்களையும், அதற்கு மூளையாக செயற்பட்டவர்களையும் அடையாளம் காணாத காரணத்தினால் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்கள் சம்பவம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாக அசாத் மௌலவி சனல் 4 காணொளி மூலம் கூறியிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சனல் 4 காணொளியின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் பல அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தற்போது கவனம் செலுத்தி வருவதாக அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *