மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில் வேண்டுமானால் அவர்களுக்கு தேவையான கட்சிகளில் வாக்கு கேட்கட்டும் – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்ட நிறுவனங்களே கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. மாறாக எமது மக்கள் அல்லர். எனினும், மக்களையும் குத்தகைக்கு எடுத்தவர்கள் போலவே கம்பனிகாரர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு அனுமதி வழங்க முடியாது. மக்களின் பிரதிநிதியாகவே நான் அங்கு சென்றேன். எனவே, இது விடயத்தில் பிரித்து பேச வேண்டாம்.
மலையக மக்களுக்கான காணி உரிமை பற்றி பேசப்படுகின்றது. ஜனாதிபதியிடம் இதனை வலியுறுத்தியுள்ளோம். 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. எனவே, இணைந்து செயற்பட்டு எமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம்.
என்னைவிட அனுபவம்மிக்க மலையக அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் என்னால் முடிந்தவற்றை நான் செய்து வருகின்றேன். முன்னோக்கி செல்வதற்கான ஆலோசனைகளைக் கூறுங்கள்.
ஜனாதிபதியுடன் கடந்த 11 ஆம் திகதி சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்கவில்லை. 12 ஆம் திகதி நடைபெற்ற நடை பயணம் இதற்கு காரணம் கூறப்பட்டது. என்னால் முடிந்த விட்டுக்கொடுப்புகளை நான் செய்துள்ளேன் . முற்போக்கு கூட்டணியின் மேடையில்கூட ஏறினேன். மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன். மாறாக அரசியல் செய்யவில்லை.
மலையக பகுதிகளில் சிங்கள, முஸ்லிம் எம்.பிக்களும் உள்ளனர். அவர்களும் பேச்சுக்கு வர வேண்டும்.” – என்றார்.