தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பது மிகப்பெரிய தவறு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01.08.2023) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது, தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்திப் பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதும் மிகப்பெரிய தவறாகும், நான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன்.
மேலும், ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை நாடாளுமன்றமே அதைத் தீர்மானிக்க வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல அணைத்து மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்குத் தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார்.
அந்த உரிமையைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக் கொள்ளவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
69 இலட்ச மக்களின் கோரிக்கை புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது. ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்ற தாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.