வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய முறைமை 8 மாகாணங்களில் நடைமுறை

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் புதிய முறைமை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் நாட்டின் 8 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, வடமேல், தெற்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் முதலில் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமை (eRL 1.0) தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களினால் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு நேற்றைய தினமும் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதியும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இணையம் மூலமாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் வசதியும் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின் ஆதரவுடன் தற்போதைய வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையை நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கல் முறைமையானது கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *