ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளனர்.

இன்று அதிகாலை, சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எஸ். கியூ 469 என்ற விமானம் மூலம்இன்று அதிகாலை 12.30க்கு சிங்கப்பூரின் சென்டு விமான நிலையம் நோக்கி பயணித்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புக்கான சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்த்தன, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்களுக்கான விசேட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க உள்ளிட்ட 10 தூதுக் குழுவினர் பயணித்ததாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் , சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் , நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் குறித்த விஜயம் காரணமாக 4 இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பதில் தொழிநுட்ப அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவால் பதில் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் செயற்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *