அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26.07.2023) மாலை 5.30 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 13 ஆம் திருத்தம் என்பது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் தனக்கு மாத்திரமன்றி முன்பு இருந்த எந்த நிறைவேற்று ஜனாதிபதிக்கும் இருக்கவில்லை.
அதற்கான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உரியது. நாட்டு நலனுக்காக யோசனையை முன் வைப்பது மட்டுமே எனது பணி.
மேலும் அவர் ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள் என்றும்,
எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.