50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு:

இறக்குமதி செய்யப்பட்ட 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வத்தளை – ஹெந்தலை பகுதியில் நேற்று (05.08.2023) சனிக்கிழமை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அவசர சோதனை பிரிவு அதிகாரிகள் குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

மனித பாவனைக்கு பொருந்தாத சுமார் 80,000 டின் மீன்கள் மீள்பொதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான பாசுமதி உள்ளிட்ட பல்வேறு வகையான அரிசி வகைகளின் உற்பத்தி செய்யப்பட்ட திகதி மற்றும் காலாவதியான திகதிகளை மாற்றி புதிய பொதி உரைகளுக்கு மாற்றீடு செய்து சந்தைக்கு விநியோகம் செய்வதற்கு தயாராக இருந்தபோது மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாவனைக்கு பொருத்தமற்ற ஒரு தொகை பருப்பு வகை மற்றும் கொத்தமல்லி தொகையினையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் அவற்றில் காணப்பட்ட பூச்சி இனங்களை இல்லாமல் செய்வதற்கு மனித உடலுக்குப் பொருந்தாத பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

களஞ்சியசாலையில் உள்ள உணவுப் பொருட்களின் பெறுமதி 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் குறித்த பொருட்கள் அனைத்தும் கொழும்பு – நான்காம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன் குறித்த களஞ்சியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *